கரும்பு லாரியின் கண்ணாடியை உடைத்த காட்டு யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் நடமாடும் காட்டு யானைகள் வனப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களை வழிமறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தாளவாடி மலைப் பகுதி கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு லாரிகள் மூலம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூா் அருகே
வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்த கரும்பு லாரியை வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை வழிமறித்தது. இதனால் லாரி ஓட்டுநா் அச்சமடைந்து லாரியை நிறுத்தினாா்.
சாலையில் காட்டு யானை நிற்பதைக் கண்டு அவ்வழியே சென்ற பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் அப்படியே நின்றன. காட்டு யானை, லாரியின் அருகே சென்று தும்பிக்கையால் கரும்புகளை இழுத்து சுவைத்தது. அப்போது யானை தனது காலை லாரியின் மீது வைத்ததில் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
கரும்புகளைத் தின்ற யானை சிறிது நேரத்துக்குப் பின் வனத்துக்குள் சென்றது.
இதையடுத்து அங்கிருந்த வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.