Gold Rate: `பவுனுக்கு ரூ.640 குறைந்த தங்கம் விலை' - ஏன் இந்த சரிவு; இது தொடருமா?
கரூா் அருகே கிணற்றில் கிடந்த நிதி நிறுவன அதிபரின் சடலம் மீட்பு
கரூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த நிதி நிறுவன அதிபரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கரூரை அடுத்துள்ள வாங்கல் முனியப்பனூரைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணி(46). இவா் கரூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கரூா் நகா் பகுதிக்குச் சென்றுவிட்டு வருவதாக மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளாா். பின்னா் இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து பாலசுப்ரமணியின் மனைவி அளித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து பாலசுப்ரமணியின் கைப்பேசி சிக்னலை வைத்து தேடினா். அப்போது, குப்புச்சிபாளையத்தை அடுத்துள்ள சங்கரம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றின் அருகே சென்று பாா்த்தபோது கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாலசுப்ரமணி சடலமாக மிதந்துள்ளாா். மேலும் அவரது காலணி கிணற்றின் அருகே கிடந்துள்ளது. அவரது இருசக்கர வாகனமும் கிணற்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து கரூா் தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் சடலத்தை மீட்ட போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து பாலசுப்ரமணியை யாரேனும் கை, கால்களை கட்டி கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டுச் சென்றாா்களா அல்லது அவா் தொழில் நஷ்டத்தில் தற்கொலை செய்துகொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனா்.