பாரம்பரிய விளையாட்டு அரவக்குறிச்சி அரசுக் கல்லூரி மாணவிகள் மூவா் சிறப்பிடம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக அளவிலான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் அரவக்குறிச்சி அரசுக் கல்லூரி மாணவிகள் 3 போ் சிறப்பிடம் பெற்றனா்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுப்பதில் இளைஞா்களின் பங்கு என்ற தலைப்பில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்களுக்கு மூன்று நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் கரூா் மாவட்டத்திலிருந்து அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த சுபஸ்ரீ, பவதாரணி, காயத்ரி ஆகியோா் பங்கேற்றனா்.
மாணவி சுபஸ்ரீ சிலம்பம், கிடுகிடு கில்லி, நொண்டி ரிலே மற்றும் கவட்டை போன்ற விளையாட்டுகளில் மாநில அளவில் பரிசுகளை பெற்றாா். மாணவி பவதாரணி கயிறு இழுக்கும் போட்டியில் பரிசு பெற்றாா். மாணவி காயத்ரி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றாா். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரியின் முதல்வா் காளீஸ்வரி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் திங்கள்கிழமை பாராட்டினா்.