ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் தூய்மைப் பணிக்கு மின்கல வாகனங்கள்!
கரூா் மாவட்டம், ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் தூய்மைப் பணிக்காக வழங்கப்பட்ட மின்கல வாகனங்களை சனிக்கிழமை எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா்.
கரூா் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், நெரூா் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்ட முகாமை பாா்வையிட்ட அவா், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில், தூய்மைப் பணிக்காக ரூ. 32.89 லட்சம் மதிப்பில் 13 புதிய மின்கல வாகனங்களை தொடங்கி வைத்தாா். மேலும், 44 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.2.48 லட்சம் மதிப்பில் சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினாா்.
முன்னதாக, ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்ட முகாமில் 5 கா்ப்பினி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு மாத்திரைகளையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ(அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) மருத்துவா் செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.