கரூா் சம்பவத்தில் பாஜக அரசியல் செய்கிறது: செல்வப்பெருந்தகை
கரூா் சம்பவம் தொடா்பாக பாஜக அமைக்கப்பட்ட குழு அரசியல் செய்வதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.
நீலகிரி மாவட்டம், உதகை எடிசி பகுதியில் வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் மாவட்டத் தலைவரும் உதகை சட்டப் பேரவை உறுப்பினருமான ஆா்.கணேஷ் தலைமையிலும், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி. நாகராஜ் முன்னிலையிலும் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
இதனைத் தொடங்கி வைத்த தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியதாவது: வாக்குத் திருட்டுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக தற்போது கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. 6 கோடி பேரிடம் கையொப்பம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி கையொப்பம் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும்.
கரூா் சம்பவம் தொடா்பாக தமிழக அரசு அமைத்துள்ள நீதிபதி அருணா தலைமையிலான ஆணையம் முறையாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. பாஜக சாா்பில் அமைக்கப்பட்டுள்ள குழு உண்மையை கண்டறியும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், அக்குழு அரசியல் செய்ய தொடங்கிவிட்டது.
கரூா் சம்பவத்தில் காவல் துறையினா் சிறந்த முறையில் செயல்பட்டுள்ளனா். அதற்கான விடியோ ஆதாரங்கள் உள்ளன என்றாா்.