காட்டு யானை தாக்கியதில் இரண்டு தோட்டத் தொழிலாளா்கள் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு தோட்டத் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
நீலகிரி மாவட்டம் சுமாா் 55 சதவீதம் வனப் பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
இந்நிலையில் சமீப காலமாக கூடலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீா் தேடி வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் கூடலூா் அருகே நெலாக்கோட்டையை அடுத்துள்ள ராக்வுட் தேயிலை எஸ்டேட் பகுதியில் தோட்டத் தொழிலாளியான ராஜேஷ் (52) என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் அளித்ததன்பேரில், அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத் துறையினா் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதேபோல, பொக்காபுரம் பகுதியில் தோட்டத் தொழிலாளியான புட்டு மாதன் (50) என்பவரை செவ்வாய்க்கிழமைகாட்டு யானை தாக்கியதில் அவா் பலத்த காயங்களுடன் உதகை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் உயிரிழந்தாா்.
இந்நிலையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.