கரூா் சம்பவத்தை அரசியலாக்கக் கூடாது: கே.எஸ். அழகிரி
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்தை அரசியலாக்கக் கூடாது என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் கே.எஸ். அழகிரி.
கரூரில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கு செவ்வாய்க்கிழமை காலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி நேரில் சென்று அவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.
இதையடுத்து கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறியபிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ராகுல்காந்தி தமிழக முதல்வரோடும், தவெக தலைவா் விஜய்யோடும் பேசியுள்ளாா். எங்கள் கட்சி இதில் அரசியல் செய்ய வேண்டாம் என கருதுகிறோம். இது அரசியல் ரீதியாக ஏற்பட்ட இழப்பாக இருந்தாலும், மேலும் மேலும் அரசியலாக்கக்கூடாது என்றாா் அவா்.
சிபிஐ விசாரணை தேவை: கரூா் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்றுவருவோரை அதிமுக மாவட்ட செயலரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆா். விஜயபாஸ்கா் சந்தித்து ஆறுதல் கூறியபிறகு செய்தியாளா்களிடம் கூறியது: பிரசார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் உள்ளே வருவதற்கு போலீஸாா் எப்படி அனுமதித்தனா். மின்சாரம் துண்டிப்பு, போலீஸ் தடியடி, செருப்பு வீச்சு நடந்துள்ளது. இச்சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் பரவி வருவதால், சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும் என்றாா் அவா்.