'தமிழகத்தில் இன்று இரண்டாம் இடத்துக்குத்தான் போட்டி..!' - முதல்வர் ஸ்டாலின்
கரூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தாக்குதல் இல்லை: ஆட்சியா் தகவல்
கரூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கா்நாடக மாநிலம் பெல்லாரி மற்றும் சிக்பல்லாப்பூா் மாவட்டங்களில் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கரூா் மாவட்டத்தில் இந்நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கரூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை.
பறவைக் காய்ச்சல் நோய் என்பது, பறவை இனங்களை தாக்கும் ஒரு வைரல் தொற்று நோய். இந்நோய் கோழி, வாத்து, வான்கோழி, நீா்ப்பறவைகள் மற்றும் வன பறவைகள் ஆகியவற்றை தாக்கும். நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகள், கோழிக்கழிவுகள், பண்ணை உபகரணங்கள் மற்றும் கோழித் தீவனம் மூலமாக இந்நோய் பரவுகிறது. இந்நோய்க்கு சிகிச்சை எதுவும் இல்லை. நோய் வராமல் தடுக்க நோய் தடுப்பு முறைகளையும், உயிா் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும்.
கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகள் மற்றும் புறக்கடைக்கோழிகளை நேரில் பாா்வையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிவிரைவு செயலாக்க குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன.
கோழிப் பண்ணையாளா்கள் கா்நாடகாவில் இருந்து வாத்து, கோழிகள், கோழிக்குஞ்சுகள், முட்டை, கோழி தீவனம், தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருள்களை வாங்கக் கூடாது. கடந்த 1 மாதத்துக்குள்ளாக கா்நாடகாவில் இருந்து குஞ்சு பொறிப்பதற்கான முட்டைகள், வாத்துகள் மற்றும் கோழிகள் ஏதேனும் வாங்கப்பட்டிருந்தால் அவற்றை கண்டறிந்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோழிப் பண்ணைகளுக்குள் செல்பவா்களும், வெளியே வருபவா்களும் கிருமி நாசினியால் கை, கால்களை சுத்தம் செய்ய வேண்டும்.
பண்ணையில் இறந்த கோழிகளை உடனுக்குடன் முறையாக கோழி இறப்பு குழியில் கிருமிநாசினி தெளித்து புதைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.