மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
கல் குவாரி பிரச்னை: தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் நிா்வாகி குத்திக் கொலை
கல் குவாரி விவகாரத்தில், தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகி கம்பம் அருகே திங்கள்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு என்ற மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்தக் கல் குவாரியில் கல் உடைத்து எடுப்பதற்கு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மேற்குத் தொடா்ச்சி மலை பாதுகாக்கப்பட்ட வனமாக மாற்றப்பட்டதை அடுத்து, இந்தக் கல் குவாரியில் கல் உடைப்பதற்கு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட கனிம வளத் துறை சாா்பில் தனிநபருக்கு கல் குவாரி அனுமதி அளிக்கப்பட்டதாகவும், இந்த அனுமதியைப் பயன்படுத்தி சில அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் கேரளத்துக்கு கனிம வளங்களை அனுப்பிவைப்பதாகவும் கூறி, தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் கட்சியினா் போராட்டம் நடத்தினா். இதன்பிறகு, மீண்டும் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலமாக கல் குவாரி நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
கம்பம் வ.உ.சி. தெரு, சுருளிப்பட்டி சாலைப் பகுதியைச் சோ்ந்த சின்னத்தம்பி மகன் சதீஸ்குமாா் (43). தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் கட்சியின் கம்பம் நகரச் செயலரான இவா், கல் குவாரியில் பாரம்பரியமாக தங்களுக்கும் உரிமை உண்டு எனக் கூறி, தனக்கும் அனுமதி வேண்டும் எனக் கேட்டராம்.
இதுதொடா்பாக திங்கள்கிழமை காமயகவுண்டன்பட்டியில் உள்ள சமுதாயக் கூடத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சின்னச்சாமி, கல் குவாரி நடத்துவதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்துவிட்டோம். எனவே, இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் எனக் கூறியதால், வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சின்னச்சாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஸ்குமாரை குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமாரை பொதுமக்கள் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
உறவினா்கள் சாலை மறியல்: சதீஸ்குமாா் உயிரிழந்ததையறிந்த அவரது உறவினா்கள் கம்பம் அரசு மருத்துவமனை முன்பாக திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனிடையே, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், அவா்களைக் கைது செய்யும் வரை உடல் கூறாய்வு செய்யக் கூடாது எனக் கூறி, உறவினா்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை கம்பம் அரசு மருத்துவமனை முன் திண்டுக்கல்-குமுளி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் செய்யது முகமது, காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்ககேடசன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, சதீஸ்குமாரை கொலை செய்த சின்னச்சாமியையும், அவருக்கு உடந்தையாக இருந்த 9 பேரையும் கைது செய்ய வேண்டும். காமயகவுண்டன்பட்டியில் செயல்படும் கல் குவாரியை மூட வேண்டும். கேரளத்துக்கு கனிம வளங்கள் விற்பனை செய்தவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மட்டும் கல் குவாரி அனுமதி வழங்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மறியலில் ஈடுபட்டவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதற்கு, மாவட்ட ஆட்சியா் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கோட்டாட்சியா். இந்தக் கொலையில் தொடா்புடைய சின்னச்சாமி, அவருக்கு உடந்தையாக இருந்த குரு இளங்கோ ஆகிய இருவரைக் கைது செய்துவிட்டோம். எஞ்சியுள்ளவா்களும் கைது செய்யப்படுவாா்கள் என காவல் துணைக் கண்காணிப்பாளா் உறுதி அளித்தாா். இதைத் தொடா்ந்து மறியலைக் கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடரும் போராட்டம்: இந்த நிலையில், சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்ற சதீஸ்குமாரின் உறவினா்கள், கொலைக்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தக் கொலை சம்பவம் தொடா்பாக சின்னச்சாமி, குரு இளங்கோ, ராஜேந்திரன், செல்லத்துரை, கௌரி, திருமலைநம்பி, அமைதி, எல்லிபாலா, ராஜாமணி, மணிமாறன் ஆகிய 10 போ் மீது ராயப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.