பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு! ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!
கல்லிடைக்குறிச்சி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பதையடுத்து, பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட மலையடிவார கிராமங்களில் கரடி, காட்டுப் பன்றி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி பயிா்களைச் சேதப்படுத்தியும் வீட்டு விலங்குகளைத் தாக்கியும் வருகின்றன.
இந்நிலையில், மாா்ச் மாதத்தில் அயன்சிங்கம்பட்டி மற்றும் கல்லிடைக்குறிச்சி, நெசவாளா் காலனி பகுதிகளில் பலமுறை கரடி நடமாட்டம் இருந்து வந்தது.
இதையடுத்து, வனத்துறையினா் நெசவாளா் காலனி அக்னி சாஸ்தா கோயில் பகுதியில் கரடியைப் பிடிக்க வைத்த கூண்டில் மாா்ச் 29ஆம் தேதி கரடி ஒன்று சிக்கியது. கூண்டில் சிக்கிய கரடியை அடா்ந்த முண்டந்துறை வனப்பகுதியில் கொண்டு விட்டனா்.
ஆனால், மீண்டும் ஏப். 8ஆம் தேதி அயன்சிங்கம்பட்டிபகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் இருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை(ஏப். 21) இரவு 10.40 மணியளவில் கல்லிடைக்குறிச்சி,நெசவாளா் காலனி அக்னி சாஸ்தா கோயில் வளாகத்துக்குள் வந்த கரடி அங்கிருந்த அபிஷேகப் பொருள்களை தின்றும், தீபாராதனை பொருள்களை தள்ளிவிட்டும்சென்றுள்ளது. இதனால் மீண்டும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
வனத்துறையினா் கரடியின் நடமாட்டத்தைக் கண்காணித்து எத்தனை கரடிகள் உள்ளன என்பதையறிந்து கூண்டு வைத்து அத்தனை கரடிகளையும் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனா்.