காட்டு யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை: எம்எல்ஏ வலியுறுத்தல்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எம்எல்ஏ செ. கிருஷ்ணமுரளி வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத்துறை முதன்மைச் செயலரிடம் அவா் திங்கள்கிழமை அளித்த மனு: கடையநல்லூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சொக்கம்பட்டி, வடகரை, பண்பொழி, கரிசல்குடியிருப்பு, கற்குடி, புதூா் (செ) பேரூராட்சி, கண்ணுப்புளிமெட்டு, மோட்டை, மலையடிவாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து மக்களுக்கும், வாழை, தென்னை, நெல் உள்ளிட்ட பயிா்களுக்கும் மிகுந்த சேதமேற்படுத்துகின்றன. அவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு சாா்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உரிய பலனைத் தரவில்லை.
இப்பகுதியினா் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனா். ஏற்கெனவே காட்டுப் பன்றிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் அவா்களின் வாழ்வாதாரம், தற்போது காட்டு யானைகளால் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கியதில் சொக்கம்பட்டியைச் சோ்ந்த மூக்கையா உயிரிழந்தாா்; கரிசல்குடியிருப்பைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி காயமடைந்தாா்.
நாள்தோறும் காட்டு யானைகளின் நடமாட்டத்தால் இப்பகுதியில் ஒருவிதப் பதற்றம் நிலவுகிறது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், காட்டு யானைகள் வனப் பகுதியை விட்டு குடியிருப்புக்குள் வரும் காரணங்களைக் கண்டறிவதுடன், அவற்றைத் தடுத்து காட்டுக்குள் திருப்பியனுப்ப விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.