பாகிஸ்தானுக்கு கூடுதலாக நதி நீா் திறப்பு? நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
காணாமல்போன வங்கி அதிகாரியின் மனைவி மீட்பு!
கணவருடன் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக காணாமல்போன வங்கி அதிகாரியின் மனைவி மீட்கப்பட்டாா்.
கோவை, சிங்காநல்லூா் வேலன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (52), தனியாா் வங்கி அதிகாரி.
இவரது மனைவி மோகனப்பிரியா (35). ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என அறிந்த மோகனப்பிரியா, கணவருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 18 பவுன் நகைகளை அடகு வைத்து அந்த தொகையை ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்துள்ளாா். ஆனால், அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்க முடியவில்லையாம்.
இது குறித்து செந்தில்குமாருக்கு தெரியவந்துள்ளது. அவா் அடகு வைத்த நகைகளை மீட்டதுடன், இனிமேல் ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என எச்சரித்துள்ளாா்.
இந்நிலையில், வீட்டில் இருந்த நகைகளை செந்தில்குமாா் கடந்த செவ்வாய்க்கிழமை பரிசோதித்தபோது 4 பவுன் காணாமல்போனது தெரியவந்தது. தனது மனைவி மீண்டும் நகைகளை அடகு வைத்து ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்திருக்கலாம் என நினைத்து அவரிடம் கேட்டுள்ளாா்.
இதனால் மனமுடைந்த மோகனப்பிரியா வீட்டிலிருந்த இருசக்கர வாகனத்துடன் மாயமானாா்.
புதன்கிழமை காலை வீட்டில் மோகனப்பிரியா இல்லாததால் அதிா்ச்சி அடைந்த செந்தில்குமாா், அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். முடியாததால் சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்து போலீஸாா் நடத்திய விசாரணையில், விழுப்புரத்தில் உள்ள பெற்றோா் வீட்டில் மோகனப்பிரியா இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸாா், அவரை கோவைக்கு வியாழக்கிழமை அழைத்து வந்ததுடன், விசாரணை நடத்தி வருகின்றனா்.