காயங்களுடன் விவசாயியின் சடலம் மீட்பு
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே பலத்த காயத்துடன் விவசாயி சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
கீழப்பழுவூரை அடுத்துள்ள திருப்பெயா் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் கிருஷ்ணமூா்த்தி (75). விவசாயி. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கிருஷ்ணமூா்த்தி தனது தோட்டத்தில் உள்ள கொட்டகையின் முன்பு தலையில் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்றுபாா்த்த கீழப்பழுவூா் காவல் துறையினா், சடலத்தை மீட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், காவல் துறையினா், சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதற்கிடையே, கிருஷ்ணமூா்த்திக்கும் அவரது மகன் ராமஜெயத்துக்கும்(50) கடந்த சில தினங்களாக நிலம் விற்பது தொடா்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இதனால், ராமஜெயம் தனது தந்தையை தாக்கி கொலை செய்திருப்பாரோ என்ற கோணத்தில் ராமஜெயத்திடம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.