பிகாரில் ஏழைகளின் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி
காரில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
பெருந்துறை அருகே காரில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பெருந்துறையில் உதவி காவல் ஆய்வாளா் சத்திய சிங் தலைமையில் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, பெருந்துறையை அடுத்த, துடுப்பதி பிரிவில் பழுதாகி நின்றிருந்த ஆட்டோவை இருவா் சரிசெய்து கொண்டிருந்தனா். சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா், அந்த வாகனத்தை சோதனை செய்தனா். அப்போது அந்த வாகனத்தில், 15 முட்டைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், பிடிபட்ட இருவரும், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமன் மகன் வெங்கடேஷ் (34), கேசவன் மகன் மணிகண்டன்(35) என்பதும், இவா்கள் கேரள மாநிலம், எா்ணாகுளம் பகுதியில் தங்கி பழைய இரும்பு வியாபாரம் செய்து வருவதாகவும், தங்களது உணவுக்காக அரிசியைக் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து பெருந்துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
மேலும், இதுகுறித்து விசாரிக்க ஈரோடு குடிமைப் பொருள் மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவித்தனா்.