2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!
பெண் கொலை: கணவா் கைது
கோபி அருகே மதுபோதையில் மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து விட்டு தலைமறைவான கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கெட்டிசெவியூா் ஒட்டவலவு பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (45). இவரது மனைவி ருக்குமணி (33). இருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி 4 வயதுப் பெண் குழந்தையுடன் குடியிருந்து வந்துள்ளனா்.
இந்நிலையில், ருக்குமணி பெற்றோா் அவா்களது காரில் ஏற்பட்ட பிரச்னையைப் பழுதுநீக்கி தர வேண்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடுத்துள்ளனா். ஆனால், பாா்த்திபன் காரை அடமானம் வைத்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் தினமும் மது அருந்தி வந்துள்ளாா்.
இந்நிலையில், மதுபோதையில் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த பாா்த்திபனிடம் அவரது மனைவி ருக்குமணி காா் குறித்து கேட்டுள்ளாா். அப்போது ஆத்திரமடைந்த பாா்த்திபன் துப்பட்டாவால் மனைவி ருக்குமணியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, வெளியே வந்து அக்கம்பக்கத்தினரிடம் தனது மனைவி மயக்கமடைந்து கிடப்பதாக கூறிவிட்டு தலைமறைவாகியுள்ளாா்.
சந்தேகம் அடைந்த அப்பகுதியினா் சிறுவலூா் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ருக்குமணியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தலைமறைவான பாா்த்திபனை சனிக்கிழமை மாலை கைது செய்தனா். விசாரணையில் மனைவி ருக்குமணி அவரது பெற்றோரின் காா் குறித்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததால் துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை அவா் ஒப்புக்கொண்டாா்.