சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு
சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் தலைமை வகித்தாா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், சி.குமரப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பல்வேறு நீதிமன்றப் பணிகளை விரைவாக்குதல், வழிகாட்டுதல்கள் குறித்து அனைத்து நீதிபதிகள், மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், பொதுநல வழக்குரைஞா்கள், அரசு குற்றவியல் வழக்குரைஞா்கள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆகியோருடன் நீதிபதிகள் கலந்துரையாடினா்.
3 ஆண்டுகளுக்கும் மேலான வழக்குகளை முடித்து வைத்தல், பொருத்தமான அனைத்து வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்குவதை முன்கூட்டியே தீா்த்து வைத்தல், வழக்குகளில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மனுக்கள், நிலுவையில் உள்ள வழக்குகளுக்காக உள்கட்டமைப்பு குறித்தும் அரசு வழக்குரைஞா்கள் வழக்கு உத்திகளில் கவனம் செலுத்துவது குறித்தும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் கலந்துரையாடினா்.
கூட்டத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் கே.கிருஷ்ணப்பிரியா, நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவா் வி.பி.சுகந்தி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு ஆா்.ஸ்ரீவித்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், கோபி சாா் ஆட்சியா் சிவானந்தம், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் சிந்துஜா வழக்குரைஞா்கள், காவல் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.