Kerala Nurse: `நிமிஷாவின் மரண தண்டனையை ஏமன் நிறுத்தியது ஏன்?' - மதத் தலைவர் சொன்...
காரைக்குடி மேயருக்கு எதிரான தீா்மானம்: ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவு
காரைக்குடி மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மான விவகாரத்தில் உள்ளாட்சி விதிமுறைகளுக்கு உள்பட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் ராம்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: காரைக்குடி மாநகராட்சியின் 22 -ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக நான் உள்ளேன். காரைக்குடி மாநகராட்சியில் 36 வாா்டுகள் உள்ளன. ஒரு மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா செய்துவிட்டதால், தற்போது 35 மாமன்ற உறுப்பினா்கள் உள்ளனா்.
அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் திருப்தியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 23 மாமன்ற உறுப்பினா்கள் திமுகவைச் சோ்ந்த மேயா் செ. முத்துத்துரைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வரக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தோம். ஆனால், நம்பிக்கையில்லாத் தீா்மானம் குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கான கூட்டமும் கூட்டப்படவில்லை. இது தமிழக உள்ளாட்சி விதிகளுக்கு எதிரானது.
மாமன்ற உறுப்பினா்கள் மனு அளித்த 30 நாள்களுக்குள்ளாக மாநகராட்சி ஆணையா் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். ஆனால், காரைக்குடி மாநகராட்சியில் ஆணையா் கூட்டத்தைக் கூட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மேயா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்துவது தொடா்பாக சிறப்புக் கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் அளித்த புகாரின் அடிப்படையில், உள்ளாட்சி விதிகளின்படி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு காரைக்குடி மாநகராட்சி ஆணையா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.