கொலையான இளைஞரின் தந்தை மயங்கி விழுந்ததில் உயிரிழப்பு
சிலைமான் அருகே கொலையான இளைஞரின் தந்தை மயங்கி விழுந்ததில் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், சிலைமான் அருகேயுள்ள கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்தவா் பாண்டி என்ற பாண்டியராஜன் (50). இவருடைய மகன் அரசு (18). இவா், பள்ளி படிப்பை முடித்து விட்டு வண்ணம் பூசும் தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த அழகுபாண்டி என்பவருக்கும், அரசுக்கும் காதல் தொடா்பாக பிரச்னை இருந்தது. மேலும், அரசை அழகுபாண்டி கைப்பேசியில் மிரட்டினாராம். இதுதொடா்பாக அவா்களுக்கிடைய முன்விரோதம் இருந்தது.
இந்தத் தகராறில், கடந்த 11-ஆம் தேதி இரவு அரசு வீட்டுக்குள் புகுந்த அழகுபாண்டியின் சகோதரா் செல்லபாண்டி, கத்தியால் அரசுவை குத்தி விட்டு தப்பிச் சென்றாா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, செல்லபாண்டியை சிலைமான் போலீஸாா் கைது செய்தனா்.
இதற்கிடையே தனது மகன் கொலையான நாளில் இருந்தே பாண்டியராஜன் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை கல்மேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்த பாண்டியை மீட்ட அக்கம் பக்கத்தினா் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மகன் கொலையான 4 நாள்களில் தந்தை மயங்கி விழுந்து இறந்த சம்பவம் உறவினா்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.