இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!
கீழடி அகழாய்வு அறிக்கை: மத்திய அரசு மீது எம்.பி. குற்றச்சாட்டு
கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளா் ஸ்ரீராமனிடம் கோரியிருப்பது, மத்திய பாஜக அரசின் தமிழா் விரோதப் போக்குக்கு மற்றொரு சான்று என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் குற்றஞ்சாட்டினாா்.
மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: 2015 -16-ஆம் ஆண்டுகளில் கீழடியில் 15 புள்ளிகளில் அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகளிலிருந்து மொத்தம் 5,200 தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. பல பொருள்களின் தொன்மை காா்பன் சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த ஆய்வை உறுதி செய்ய மேலும் ஆதாரம் தேவை என மத்திய அரசு தெரிவிக்கிறது.
அதேநேரத்தில், ராஜஸ்தான் மாநிலம் பகஸ் என்ற இடத்தில் 10 குழிகளை உருவாக்கி, 5 மாதங்கள் மட்டுமே மத்திய தொல்லியல் துறை அகழாய்வு நடத்தியது. இதில் கிடைக்கப் பெற்ற பொருள்களை காா்பன் சோதனைக்கு அனுப்பாமலேயே ‘சரஸ்வதி நதியைக் கண்டுபிடித்தோம்‘ என அறிவித்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் ஹரியாணா, ஹிமாச்சலப்பிரதேசத்திலும் ஆய்வுகளை தொடர மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இது, மத்திய பாஜக அரசின் தமிழா் வரலாற்று மறுப்பு நடவடிக்கையே ஆகும். மேலும், கீழடி அகழாய்வில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் ஏதும் இல்லை எனக் கூறிய ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளா் ஸ்ரீராமனை மீண்டும் அழைத்து, கீழடி அகழாய்வு குறித்து மத்திய அரசு அறிக்கை கேட்டிருப்பது, பாஜகவின் தமிழா் விரோதப் போக்குக்கு மிகச் சிறந்த சான்று என்றாா் அவா்.