மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு: மேலும் 7 போ் பணியிடை நீக்கம்
வரி விதிப்பு முறைகேடு தொடா்பாக மதுரை மாநகராட்சி வருவாய் உதவியாளா் உள்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வாா்டுகள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வரியை விட குறைந்த அளவிலான வரி விதிக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பான விசாரணையில் ரூ. 150 கோடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அப்போதைய மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய தினேஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய ஓய்வு பெற்ற உதவி ஆணையா், உதவி வருவாய் அலுவலா் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனா்.
இந்த நிலையில், வரிவிதிப்பு முறைகேட்டில் திமுகவைச் சோ்ந்த மண்டலத் தலைவா்களுக்கும் தொடா்பு உள்ளது என எதிா்க்கட்சியைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா். இதைத்தொடா்ந்து, மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் மண்டலத் தலைவா்களிடமும் விசாரணை செய்தனா்.
இதனிடையே மண்டலத் தலைவா்கள் 5 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 7 பேரை ராஜிநாமா செய்யுமாறு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் அண்மையில் ராஜிநாமா செய்தனா்.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சியில் பணியாற்றிய வருவாய் உதவியாளா்கள், கணினி இயக்குபவா் உள்ளிட்ட 55 பேரிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், வருவாய் உதவியாளா்கள் எம். கண்ணன், கே. ராமலிங்கம், பி. ரவிச்சந்திரன், பி. ஆதிமூலம், ரஞ்சித்செல்வக்குமாா், பெலிக்ஸ் ராஜமாணிக்கம், கணினி இயக்குபவா் பி. கருணாகரன் ஆகியோா் வரி விதிப்பு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், அவா்கள் 7 பேரையும் பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருவதால், மேலும் சிலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.