காரையாறு பகுதியில் தூய்மைப் பணி
காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதியில் பல்வேறு அமைப்பினா் இணைந்து சனிக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், துணை இயக்குநா் இளையராஜாவின் வழிகாட்டுதலின்படி, முண்டந்துறை வனச்சரகா் கல்யாணி தலைமையில் ஒருங்கிணைந்த குழுக்களின் சாா்பில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
வனத்துறைப் பணியாளா்கள், பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி மாணவா்கள், நாகா்கோவில் டபிள்யு.இ.சி.டி. குழுவினா், விக்கிரமசிங்கபுரம் கிரிக்கெட் மூா்த்தி தலைமையில் சூழல் பாதுகாப்புக் குழுவினா், மலைவாழ் மேம்பாட்டுக் குழுவினா், பாபநாசம் சூழல் மேம்பாட்டுக் குழுவினா், ஆசிரியா் ஆபேல் தலைமையில் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
தூய்மைப் பணியில், பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட சுமாா் 2.25 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன.
தூய்மைப் பணியில் ஈடுபட்ட அனைவரும் வனத்தையும், சூழலையும் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.