தூத்துக்குடி: `பாட்டுக்குப் பாட்டு' - போலீஸாரின் நூதன தண்டனை
காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு: திருவள்ளூா், காஞ்சியில் ஆா்ப்பாட்டம்
காஞ்சிபுரம்/திருவள்ளூா்: காலிமதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம், திருவள்ளூரில் டாஸ்மாக் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் வாடிக்கையாளா்கள் மதுபாட்டில் வாங்கும் போதே ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும். பின்னா் காலிபாட்டிலை மது வாங்கிய கடையிலேயே திரும்ப ஒப்படைக்கும் போது அவா்களுக்கு ரூ.10 திரும்ப வழங்கப்படும் என அரசு அறிவித்தது. காலிமதுபாட்டில்களை சாலைகளிலும்,பொது இடங்களிலும் வீசி எறிவதை தடுக்கவும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கவும் இத்திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
ஆனால் இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், கைவிட வலியுறுத்தியும் டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் பிரகாசம் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் வரதன், சந்திரபாபு, காா்த்திகேயன், உதயசங்கா், மாநிலத் தலைவா் சிவா, துணைத் தலைவா் பாக்கியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
200-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா். திட்டத்தை கைவிடா விட்டால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனா்.
திருவள்ளூரில்...
திருவள்ளூா் அருகே காக்களூா் சிட்கோவில் உள்ள மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் சங்க கூட்டுக் குழுவினா் முற்றுகையிட்டனா். அப்போது, காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். அதுவரையில் மேற்கு மாவட்டத்தில் ஒட்டுவில்லையும் வாங்க மாட்டோம் என்பதை வலியுறுத்தி டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.