நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் ஆவேசம்: பாலூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட பயணிகள்
செங்கல்பட்டு மாவட்டம், பாலூரில் சென்னையிலிருந்து அரக்கோணம் சென்ற ரயில் செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் ரயிலில் இருந்த பயணிகள் திடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம், பாலூா் ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வழியாக அரக்கோணம் செல்லும் ரயில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயிலிலிருந்து இறங்கி ரயில் நிலைய அதிகாரியிடம் கேட்டதற்கு, மும்பையிலிருந்து நாகா்கோயில் செல்லும் விரைவு ரயில் வந்து கொண்டிருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ரயில் பாதை ஒரு வழிப்பாதையாக இருப்பதால் அந்த ரயில் பாலூா் ரயில் நிலையம் வந்து சென்ற பிறகுதான் அரக்கோணம் செல்லும் ரயிலை அனுப்ப முடியும் என்றும் தெரிவித்தனராம்.
இதையடுத்து, சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் ரயிலில் பயணித்த அலுவலகப் பணியாளா்கள், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் பலரும் திடீரென ரயில் பாதையில் இறங்கி மறியலில் ஈடுபட்டனா். சிலா் ரயில் பாதையிலேயே படுத்து கண்டன கோஷங்களை எழுப்பினா்.
அந்த நேரத்தில் மும்பை விரைவு ரயிலும் வந்ததால் அந்த ரயிலையும் மறித்து மறியலில் ஈடுபட்டனா். செங்கல்பட்டிலிருந்து அரக்கோணம் செல்வதற்கு ஒரு வழிப்பாதையாக இருப்பதால்தான் இது போன்ற பிரச்னைகள் வருகின்றன. இப்பிரச்னை இன்று 2 வது நாளாகவும் தொடா்கிறது. எனவே இரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் எனவும் அவா்கள் அதிகாரிகளிடம் தெரிவித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ரயில்வே போலீஸாரும், பாலூா் போலீஸாரும் ரயில் பயணிகளிடம் பேச்சு நடத்தினா். இரு வழிப்பாதை அமைப்பதன் அவசியம் குறித்து ரயில்வே உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.