கால்களைச் சங்கிலியால் கட்டி... நாடு கடத்தப்பட்டுள்ள இந்தியர்களுக்கு விமானத்தில் கொடுமை!
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களின் கைகளில் விலங்கு பூட்டியும் கால்களைச் சங்கிலியால் கட்டியும் அவர்களை விமானத்தில் தாயகம் அனுப்பி வைத்த கொடுமை அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து சி-17 விமானத்தில் சனிக்கிழமை(பிப். 15) நள்ளிரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள விமான நிலையத்துக்கு வந்தடைந்த 117 இந்தியர்கள் சிறைக் கைதிகளைப் போன்று நடத்தப்பட்டுள்ள விதம் கவலையளிக்கச் செய்கிறது.
அமெரிக்க விமானத்தில் நாடுகடத்தப்பட்டு தாயகம் வந்தடைந்த பயணிகளில் ஒருவரான தல்ஜீத் சிங், விமானத்தில் தாம் அனுபவித்த கொடுமைகளைப் பகிர்ந்துள்ளார். அவரது கூற்றுப்படி, தங்கள் கால்களை சங்கிலியால் கட்டிப்போட்டதாகவும், கைகளிலும் விலங்கால் பூட்டி விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதே விமானத்தில் நாடு கடத்தப்பட்டுள்ள 20 வயது இளைஞரான சௌரவ் என்பவரும் மேற்கண்ட இதே கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
முன்னதாக, முதல்கட்டமாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களும் இம்மாதம் 5-ஆம் தேதி அமிர்தசரஸ் வந்திறங்கிய நிலையில், அவர்களும் அமெரிக்க விமானத்தில் இதே பாணியில் விலங்கிட்டு அழைத்து வரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பின், இவ்விவகாரம் நாடெங்கிலும் பேசுபொருளானது. அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் பலரும், அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து, இது குறித்து மத்திய அரசு தரப்பிலிருந்து டிரம்ப் நிர்வாகத்திடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது, இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்டுள்ள இந்தியர்களும் சிறைக் கைதிகளைப் போலவே நேற்று அழைத்து வரப்பட்டுள்ளனர் அமெரிக்காவிலிருந்து.
இந்த நிலையில், மூன்றாம் கட்டமாக 100-க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ள விமானம் ஒன்று, இன்று(பிப். 16) இந்தியா வந்திறங்கவுள்ளது. அவர்களும் கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்டு அழைத்து வரப்படுவரா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.