காவல்துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத்தொழில் சிறந்து விளங்கும்: எா்ணாவூா் நாராயணன்
தமிழகத்தில் பனைத் தொழிலாளா்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் என தமிழ்நாடு பனைமரத் தொழிலாளா்கள் நல வாரிய தலைவா் எா்ணாவூா் நாராயணன் தெரிவித்தாா்.
பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு குறித்து தென் மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடியில் உள்ள தனியாா் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பனை மரத் தொழிலாளா்கள் நல வாரியத்தின் தலைவரும் சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவருமான எா்ணாவூா் நாராயணன் தலைமை வகித்தாா். ஆலோசனைக் கூட்டம் குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பனை மரத் தொழிலாளா் நலவாரியத் தலைவராக பதவியேற்று, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. முதல் ஆண்டில் நல வாரியத்தில் 15 ஆயிரம் உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டனா். 2 ஆம் ஆண்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 3 ஆம் ஆண்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்து சாதனை படைக்கப்பட்டது. தற்போது 4ஆம் ஆண்டில் பனை மரத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், ராமநாதபுரத்தில் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மாநாடு நடத்தப்படவுள்ளது. இதில், பனைத் தொழிலாளா்கள் பிரச்னைகள் அனைத்தும் விவாதிக்கப்படும்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணத்திற்கு பின்னா், பனை மரத் தொழிலாளா்கள் மீது காவல் துறையினா் கடும் நெருக்கடி கொடுக்கின்றனா். ஏற்கெனவே பனைத் தொழிலாளா்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், காவல் துறையினரின் நெருக்கடியால் தொழிலாளா்கள் பலா் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். இது குறித்து அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கவுள்ளாா். மாநாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரத் தொழிலாளா்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளனா்.
2026 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் தொடருவோம். தோ்தல் நேரத்தில் எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில், சமத்துவ மக்கள் கழக தூத்துக்குடி மாவட்டச் செயலா் மாலைசூடி அற்புதராஜ், மாநில துணைச் செயலா் காமராசா், தொழிற்சங்க செயலா் ஜெபராஜ் டேவிட், கலை இலக்கிய அணிச் செயலா் அந்தோணி பிச்சை, மாநில பொதுச் செயலா் சூலூா் சந்திரசேகரன், பொருளாளா் கண்ணன், நாடாா் பேரவை மாவட்ட தலைவா்கள் அருண் சுரேஷ்குமாா், பரமசிவன், மாவட்ட செயலா் டேனியல்ராஜ், மாவட்டப் பொருளாளா் சுப்பையா உள்பட பலா் பங்கேற்றனா்.