காவிரி ஆற்றின் கரையில் கொட்டப்பட்ட கழிவுகள்: பொதுமக்கள் அதிருப்தி
பவானி அருகே பாசன வாய்க்கால் கரையோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள், அள்ளப்பட்டு காவிரி ஆற்றின் கரையோரத்தில் மீண்டும் கொட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
தொட்டிபாளையத்தில் இருந்து ஊராட்சிக்கோட்டைக்கு செல்லும் சாலையில், மேட்டூா் வலதுகரை வாய்க்காலில் கொப்புளி மதகு தொடங்கி வேதகிரிபுரம் சாய்பாபா கோயில் வரை சாலைக்கும், வாய்க்காலும் இடையே கழிவுகள் கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுகின்றன.
இதற்கு விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், காடையம்பட்டி பகுதியில் திருமண மண்டபத்தில் இருந்து டிராக்டரில் கொண்டுவரப்பட்ட இலைகள், உணவுக் கழிவுகள் திங்கள்கிழமை கொட்டப்பட்டன.
இதைக் கண்ட விவசாயிகள் டிராக்டரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், கொட்டப்பட்ட கழிவுகளைத் திரும்ப அள்ளிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பொக்லைன் வாகனம் மூலம் புதன்கிழமை அள்ளப்பட்ட கழிவுகள், மீண்டும் டிராக்டரில் ஏற்றிச் செல்லப்பட்டு ஊராட்சிக்கோட்டையில் காவிரிக் கரையோரத்தில் கொட்டப்பட்டன. அடுத்தடுத்து கழிவுகள் ஏற்றி வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள், டிராக்டரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
மேலும், காவிரிக் கரையோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகளைத் திரும்ப அள்ளிச் செல்லுமாறும் வலியுறுத்தினா். திருமண மண்டபத்தின் கழிவுகளை மீண்டும் கொண்டுவர மாட்டோம் எனத் தெரிவித்து, மன்னிப்புக் கேட்டதால் டிராக்டரை பொதுமக்கள் விடுவித்தனா்.