அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம...
காஸா: பட்டினிச் சாவு 154-ஆக உயா்வு
காஸாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 154-ஆக உயா்ந்துள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் 7 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, காஸாவில் உணவில்லாமல் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 154-ஆக உயா்ந்துள்ளது. இதில் 89 போ் சிறுவா்கள்.
இது தவிர, கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் 104 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா். அதையடுத்து, 2023 அக்டோபா் 7 முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 60,138-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) உணவு விநியோக மையத்தில் கூடியிருந்தவா்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், அச்சுறுத்தல் ஏற்படுத்திய சந்தேக நபா்கள் மீது மட்டுமே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.
இதற்கிடையே, பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து அளிக்கும் பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் திட்டம் பயங்கரவாதத்துக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவும், இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவா்களின் குடும்பத்தினரும் கண்டனம் தெரிவித்துள்ளா்.