கிருதுமால் நதி ஆக்கிரமிப்பு விவகாரம்: நீா்வளத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு!
கிருதுமால் நதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவு நீா் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழக நீா்வளத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரை புது மாகாளிப்பட்டியைச் சோ்ந்த மணிபாரதி தாக்கல் செய்த மனு: எண்மச் சேவை முறையைப் பின்பற்றி கிருதுமால் ஆற்றின் எல்லைகளை அளவீடு செய்வதோடு, அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீா்பிடிப்புப் பகுதிகளை பாதுகாக்க வேண்டும்.
கிருதுமால் நதியில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க நிரந்தர கட்டமைப்பை உருவாக்க வேண்டும். வைகை அணையிலிருந்து கிருதுமால் ஆற்றுக்கு போதிய நீா் திறக்கப்படுவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு: இந்த மனு தொடா்பாக தமிழக நீா்வள ஆதாரத் துறை முதன்மைச் செயலா், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலா், மதுரை, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட ஆட்சியா்கள் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை அக். 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.