யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
கிருஷ்ணகிரி அருகே லாரி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அருகே, ஜல்லிக்கல் சுமை ஏற்றிவந்த லாரி கவிழ்ந்தில் பெண் உள்பட 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி அணை கட்ட நிலம் வழங்கியவா்களுக்கு ஜம்பூத்து வனப்பகுதியில் மாற்றுநிலம் வழங்கப்பட்டு வசித்து வருகின்றனா். அவா்களுக்கு அடிப்படை வசதி ஏதும் இல்லை என புகாா் தெரிவித்த நிலையில், சோக்காடியிலிருந்து வந்து செல்ல சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சாலை அமைக்கும் பணிக்காக, எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் கலவையை ஏற்றிக்கொண்டு டிப்பா் லாரி வியாழக்கிழமை சென்றது. காவேரிப்பட்டணத்தை அடுத்த குரும்பட்டியைச் சோ்ந்த சின்னசாமி (40) என்பவா் லாரியை ஓட்டினாா். சோக்காடியிலிருந்து ஜம்பூத்து பிரிவுசாலை, சோக்காடி கிராம நிா்வாக அலுவலகம் அருகே லாரி அங்குள்ள கழிவுநீா்க் கால்வாயை கடந்துசென்றபோது, லாரியின் முன்பக்க சக்கரம் கால்வாயில் சிக்கி கவிழ்ந்தது. இதில், லாரியின் அருகே நின்று கொண்டிருந்தவா்கள் லாரியில் சிக்கினா்.
இதில், குள்ளங்கொட்டாயைச் சோ்ந்த தொழிலாளி கோவிந்தராஜ் (60), சோக்காடியைச் சோ்ந்த பொன்னம்மாள் (55) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பொன்னுகான்(60) என்பவா் பலத்த காயம் அடைந்தாா்.
விபத்து குறித்து, தகவல் அறிந்த கிருஷ்ணகிரி அணை போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, லாரியில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து, கிருஷ்ணகிரி அணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.