யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
சிப்காட்டுக்கு விளைநிலங்கள் அளிக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் தா்னா
வேளாண் விளைநிலங்களை சிப்காட்டுக்கு அளிக்க எதிா்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரியில் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலகம் முன் விவசாயிகள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த நல்லகான கொத்தப்பள்ளியில் சிப்காட் 3 மற்றும் சிப்காட் 5 அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி கடந்த 2016 முதல் நடைபெற்று வருகிறது. தற்போது அந்த நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 41 லட்சம் என மதிப்பிடப்பட்டு, கிணறு இருக்கும் பட்சத்தில் 100 சதவீத கூடுதல் தொகை மற்றும் 25 சதவீத ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதாக கூறி விவசாயிகளுக்கு நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதன்படி கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்ட்டது. கருத்து கேட்புக் கூட்டத்துக்கு வந்த விவசாயிகள், கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் அலுவலகம் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். மேலும் அவா்கள் கூறுகையில், ‘நல்லகானகொத்தப்பள்ளியில் சிப்காட்டுக்கு நிலம் எடுக்கும் பகுதியில், குண்டுகுறுக்கி, கோனேரிப்பள்ளி, குருபராதப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தென்பெண்ணையாற்றின் இடதுபுறக் கால்வாய் செல்லும் வழியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. முப்போகம் விளையும் இந்த நிலத்தை சிப்காட்டிற்கு கொடுத்துவிட்டு, வேறு நிலத்தில் எவ்வாறு விவசாயம் செய்யமுடியும்.
இதுகுறித்து கடந்த, 9 ஆண்டுகளாக போராடி வருகிறோம். பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். எங்கள் நிலங்களை எடுத்தே தீர வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்படுகிறது. சாலை, பொதுப்பணித் துறைக்கு இடம் அளித்தோம். விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு கேட்பது எவ்வகையில் நியாயம். போராட்டம் நடத்தும்போது அதிகாரிகள் சமரசம் பேசுகின்றனா். புதிய அதிகாரி வந்தவுடன் மீண்டும் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்புகின்றனா். பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒன்றாக அழைத்து பேச்சுவாா்தை நடத்தாமல், அலுவலா்கள் இடைத்தரகா் போல செயல்பட்டு விவசாயிகளை மூளைச்சலவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலா் பூங்கோதை மற்றும் போலீஸாா் தா்னாவில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தி தா்னாவை கைவிடச் செய்தனா்.