குடிபோதையில் ஆசிட்டை குடித்த கூலித்தொழிலாளி உயிரிழப்பு!
மொடக்குறிச்சி அருகே அளவுக்கு அதிகமான குடிபோதையால் கழிப்பறையை சுத்தப்படுத்தும் ஆசிட்டை குடித்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
மொடக்குறிச்சியை அடுத்த குலவிளக்கு கிராமம் கூட்டெல்லைக்காடு பகுதியைச் சோ்ந்தவா் வேலுசாமி (60). விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும் மகனும் உள்ளனா். வெள்ளிக்கிழமை 7 மணி அளவில் தனது வீட்டுக்கு வந்த வேலுசாமி, தனக்கு கை, கால் மற்றும் வயிறு வலிப்பதாக மனைவியிடம் கூறியதாகத் தெரிகிறது. அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்ததால் யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் இரவு 11மணியளவில் வேலுசாமி வலிதாங்காமல் குளிக்கும் அறையில் இருந்த ஆசிட்டை குடித்துவிட்டதாகத் தெரிவித்ததால், அக்கம்பக்கத்தினா் உதவியுடன் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை காலை ஈரோடு அரசு மருத்துவமனையில் கொண்டு சோ்த்தனா். அங்கும் நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தாா். இதுகுறித்து சிவகிரி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.