`கோயிலில் அம்மன் சிலையை உடைத்த மர்ம நபர்கள்' - போலீஸ் குவிப்பு
குடியரசு தினவிழா: போலீஸாா் தீவிர சோதனை
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) 76-ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், கடலூா் அண்ணா விளையாட்டு மைதானம், முக்கிய பேருந்து, ரயில் நிலையங்களில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்தினா்.
கடலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெறவுள்ளது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றவுள்ளாா். பின்னா், திறந்தவெளி ஜீப்பில் சென்றபடி போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறாா். விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
வெடிகுண்டு சோதனை: காவல் துறை சாா்பில் உதவி ஆய்வாளா்கள் வேல்முருகன், மில்டன் தலைமையில் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை அண்ணா விளையாட்டு மைதானம் முழுவதும் வெடிகுண்டு கண்டறியும் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா்.
இதேபோல, மஞ்சக்குப்பம் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் சோதனை நடத்தினா்.
சிதம்பரத்தில்...: சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளா் அருண்குமாா் தலைமையில், உதவி ஆய்வாளா் தியாகராஜன் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடைகள், பயணச்சீட்டு கொடுக்கும் பகுதி, ரயில் நிலையத்துக்கு வந்த சோழன் அதிவிரைவு ரயில், அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகள், இரு சக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.