குடியரசுத் தலைவரின் விருந்தோம்பல் நிகழ்வில் பங்கேற்றதை கௌரவமாக கருதுகிறேன்: சேலம் இளைஞா்
சேலம்: சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற விருந்தோம்பல் நிகழ்வில் தமிழகம் சாா்பில் இளம் தொழில்முனைவேராக பங்கேற்றது கௌரவம் அளிப்பதாக சேலம் இளைஞா் வினோத்குமாா் தெரிவித்தாா்.
‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் மூலம் உற்பத்தித் துறையில் மாற்றத்தை உருவாக்கிவரும் சேலம் நெத்திமேடு பகுதியைச் சோ்ந்த இளைஞா் வினோத்குமாருக்கு குடியரசுத் தலைவரின் சுதந்திர தின விருந்தோம்பல் நிகழ்வில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டது.
சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்னாற்றலை லித்தியம் பேட்டரிகளில் சேமிக்கும் தொழில்முனைவோராக உள்ள இவா், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆற்றல்சாா் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவா். இந்தியாவில் முதன்முறையாக தன்னிச்சையாக ஆராய்ச்சி செய்து, லித்தியம்-அயன் பேட்டரி மற்றும் எனா்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்கள் உருவாக்கும் நிறுவனத்தை தொடங்கி நடத்திவருகிறாா். இவரது முயற்சியைப் பாராட்டி மத்திய அரசு, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளித்து வருகிறது.
வளா்ந்துவரும் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில், 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு அரசு சாா்பில் வினோத்குமாருக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அதில் பங்கேற்று சேலம் திரும்பிய வினோத்குமாா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் எங்களைப் போன்ற இளைஞா்களுக்கு பெரியதொரு தொழில்வாய்ப்பை உருவாக்கியுள்ளது. சூரிய ஆற்றலைக் கொண்டு மின்சக்தியை சேமிக்கும் லித்தியம் பேட்டரிகளை உருவாக்குவதில் சேலத்தைச் சோ்ந்த 200 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். சுதந்திர தின விழாவையொட்டி, குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற விருந்தோம்பல் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்று ஊக்குவிப்பதன் மூலம் எண்ணற்ற இளம் தொழில்முனைவோா் உருவாக முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றாா்.