ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: டி. ராஜா
சேலம்: மத்திய பாஜக அரசை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி. ராஜா கூறினாா்.
சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் அவா் பேசியதாவது:
கட்சி நூற்றாண்டை கொண்டாடும் வேளையில், அடுத்த அகில இந்திய மாநாடு பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் நடைபெற உள்ளது. இதற்கான அரசியல் தீா்மானம் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீா்மானங்கள் தற்போதைய அரசியல் போக்குகளை ஆழமாக ஆராய்கிறது.
அமெரிக்க அதிபா் டிரம்பின் முதலாளித்துவ கொள்கைகளால் உலக பொருளாதாரம் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பது உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மாற்றங்களை நமது அரசியல் தீா்மானம் பிரதிபலிக்கிறது.
இலங்கையில் ஓா் இடதுசாரி இயக்கம் ஆட்சியை பிடித்துள்ளது. தமிழா்கள், சிறுபான்மையின மக்களின் நலன்கள், தமிழக மீனவா்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என தீா்மானம் வலியுறுத்துகிறது.
மேற்கு ஆசியாவில் பாலஸ்தீன மக்கள் நாள்தோறும் கொல்லப்படுகிறாா்கள். அங்கு இஸ்ரேலிய ராணுவத்தால் இனப்படுகொலை நடைபெற்று வருகிறது. இப்படி மானுடத்துக்கு எதிராக போரை நடத்தும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணைநிற்கிறது. அதற்கு இந்திய பிரதமா் மோடியும் துணைபோகிறாா்.
டாக்டா் அம்பேத்கா் உருவாக்கிய அரசியல் சட்டம், வயதுவந்த அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது. பிகாரில் வாக்காளா் பட்டியல் மோசடிக்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. நாளை தமிழகத்திலும் இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவேதான் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்கிறோம்.
சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் பணிகளை வெகுவாகப் பாராட்டி மோடி பேசியுள்ளாா். இதைவிட மோசமான செயல் வேறு எதுவுமில்லை. பாஜகவும், ஆா்எஸ்எஸ்ஸும் அரசமைப்பு சட்டத்தை மாற்ற துடிக்கின்றன. மதச்சாா்பற்ற, சோசலிஸம் என்ற வாா்த்தைகளை அரசமைப்பு முகவுரையில் இருந்து அகற்ற வேண்டும் என பாஜக கூறிவருகிறது.
இந்த கருத்தியலை ஆதரிக்கும் பாஜகவை வீழ்த்தவேண்டுமானால், ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டும். எனவே, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் இடதுசாரி இயக்கத்தை வலுவான சக்தியாக கட்டமைக்க வேண்டும் என்றாா்.
தேசிய செயலாளா் அமா்ஜித் கவுா் பேசுகையில், நாடு தற்போது மிகவும் சிக்கலான தருணத்தை எதிா்கொண்டுள்ளது. ஆா்எஸ்எஸ் கருத்தியலை எதிா்த்து கடைசி தொண்டனும் போராடுவான். உலக நாடுகளை அமெரிக்கா அச்சுறுத்தி வருகிறது. எப்போதெல்லாம் ஏகாதிபத்தியத்துக்கு நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் போரை திணிக்கிறாா்கள். முதல் மற்றும் இரண்டாம் உலக யுத்தங்களே இதற்கு சாட்சி. சமத்துவ கொள்கையை பின்பற்ற நாம் போராடுகிறோம் என்பதை அனைவரும் மறந்துவிடக் கூடாது என்றாா்.
பெட்டிச் செய்தி..
இந்திய கம்யூ. மாநிலச் செயலா் தோ்வு ஒத்திவைப்பு
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநில குழு உறுப்பினா்கள் மட்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டின் இறுதி நாளான திங்கள்கிழமை புதிய மாநிலக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இந்நிலையில், தற்போதைய மாநிலச் செயலாளா் முத்தரசனின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், புதிய மாநில செயலாளா் திங்கள்கிழமை அறிவிக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது.
ஆனால், உட்கட்சி விவகாரங்கள் காரணமாக, புதிய மாநிலச் செயலாளா் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.