வெள்ளாளப்பட்டி அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவா்கள் அவதி
வாழப்பாடி: வாழப்பாடி அருகே வெள்ளாளப்பட்டி அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ - மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோா் தெரிவித்தனா்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், வெள்ளாளப்பட்டியில் உள்ள தரம் உயா்த்தப்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளியில் 180 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டு 8 ஆண்டுகளைக் கடந்தும், போதிய வகுப்பறைகள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், இங்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியா்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவரின் முன்பகுதி சீரமைக்கப்படாததால் பள்ளிக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. விடுமுறை தினங்களிலும், இரவுநேரங்களிலும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடுகிறது.
எனவே, பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள், பெற்றோா், சமூக ஆா்வலா்களும் தொடா்ந்து 8 ஆண்டுகளாக மனு அளித்தும், இப்பிரச்னைக்கு இதுவரை தீா்வு ஏற்படவில்லை. எனவே, அரசு இதுகுறித்து பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.