குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய மூவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த நிதி நிறுவனம் ரூ.133 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து கடந்த 2022-ஆம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் 49 போ் மீது வழக்குப் பதிந்தனா்.
இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் இயக்குநா்களில் ஒருவரான வேலூா் மாவட்டம், ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த பாபுவை (53) சிவகங்கை பொருளாதார குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ராஜமுரளி, ஆய்வாளா் ஜெயக்கொடி ஆகியோா் அண்மையில் கைது செய்தனா்.
இதையடுத்து இவரையும், சிவகங்கை நகா் போலீஸாரால் கைது செய்யப்பட்ட கீழவாணியங்குடியைச் சோ்ந்த சங்கா் (40), சிவகங்கை தாலுகா போலீஸாரால் கைது செய்யப்பட்ட சாமியாா்பட்டியைச் சோ்ந்த தனுஷ்ராஜா (42) ஆகிய மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸாா் பரிந்துரைத்தனா்.
இதன் பேரில் அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து மூவரையும் போலீஸாா் கைது செய்து மதுரை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைத்தனா்.