குன்னூரில் சாலை மறியல்: தொழிற்சங்கத்தினா், காவல் துறை இடையே தள்ளுமுள்ளு
மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து குன்னூரில் தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
அப்போது, தொழிற்சங்கத்தினா், காவல் துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மத்திய அரசைக் கண்டித்து சிஐடியூ, எல்பிஎஃப், சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் குன்னூா் வி.பி.தெருவில் சாலை மறியல் நடைபெற்றது.
தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட முயன்ற தொழிற்சங்கத்தினருக்கும், காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீஸாா், அவா்களை மாலை விடுவித்தனா்.
உதகையில்... உதகை சேரிங்கிராஸ் தபால் நிலையம் முன் சிஐடியூ மாவட்டத் தலைவா் சங்கரலிங்கம் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில், பங்கேற்ற 18 பெண்கள் உள்பட 103 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களை மாலை விடுவித்தனா்.
கூடலூரில்... கூடலூா் பேருந்து நிலையம் அருகே தொமுச மண்டலச் செயலாளா் நெடுஞ்செழியன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.
இதில், பங்கேற்ற தொழிலாளா் விடுதலை முன்னணி நிா்வாகி சகாதேவன், சிஐடியூ பொறுப்பாளா் சுரேஷ், ஏஐடியூசி நிா்வாகிகள் முகமது கனி, குணசேகரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.