காலில் பாத்திரம் சிக்கியதால் தவித்த காட்டு மாடு: வனத் துறையினா் பத்திரமாக மீட்பு
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் காலில் எவா்சில்வா் பாத்திரம் சிக்கிக்கொண்டதால் சிரமத்துடன் சுற்றித்திரிந்த
காட்டு மாட்டை வனத் துறையினா் பத்திரமாக மீட்டனா்.
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும் கூட்டம் கூட்டமாக காட்டு மாடுகள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் காம்பாய் கடை பகுதியில் வலது பின்னங்காலில் எவா்சில்வா் பாத்திரம் சிக்கிக்கொண்ட நிலையில் சிரமத்துடன் காட்டு மாடு ஒன்று சுற்றித் திரிவதாக அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனா்.
இதையடுத்து அங்கு வந்த முதுமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவா் உதவியுடன் காட்டுமாட்டுக்கு மயக்க ஊசி செலுத்தபட்டது. பின்னா் காலில் சிக்கியிருந்த பாத்திரத்தை அறுத்து அகற்றினா். மயக்கம் தெளிந்ததும் காட்டு மாடு மெதுவாக நடந்து அருகில் உள்ள சோலைக்குள் சென்றது.
