உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியா் ஆய்வு
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சிக்குள்பட்ட திம்பட்டி பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஜூலை 15-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த திட்டம் தொடா்பாக தன்னாா்வலா்கள் மூலம் மக்களுக்கு வீடுவீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா்.
தமிழக அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாகச் சென்று சோ்வதை உறுதிப்படுத்தும் விதமாகவும், தகுதியுள்ள மகளிருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கும் விதமாகவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
திம்பட்டி, தாந்தநாடு சமுதாயக் கூடத்தில் இந்தத் திட்டம் வரும் 15 -ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அது தொடா்பான முன்னேற்பாட்டுப் பணிகள் உள்ளிட்டவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
குன்னூா் கோட்டாட்சியா் சங்கீதா, கோத்தகிரி நகராட்சி ஆணையா் மோகன், கோத்தகிரி வட்டாட்சியா் ராஜலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.