பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: நடுவானில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இந்தியா பதிலட...
குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: ரிஷபம்
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
உங்கள் ராசிக்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தான ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குரு பகவானின் அருளால் பொருளாதாரத்தில் சிறப்பான அபிவிருத்திகள் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்தவர்கள் அவற்றை நிறைவேற்றி நற்பெயர் வாங்குவார்கள். மற்றவர்களை உங்களின் வசீகரமான பேச்சினால் கவர்வீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு உதவுவீர்கள். சிலருக்கு சொந்த வீடு அமைந்து புதுமனைப் புகுவிழா நடத்த வாய்ப்பு கிடைக்கும்.
உங்களின் மனோ தைரியம் அதிகரிக்கும். போட்டி பொறாமைகளால் பாதிப்பு வராமல் காக்கப்படுவீர்கள். இதனால் தள்ளி வைத்திருந்த விஷயங்களில் உடனடியாக முடிவெடுப்பீர்கள். உங்களிடமிருந்து விலகியிருந்த உற்றார், உறவினர்கள் நெருங்கி வந்து உறவு பாராட்டுவார்கள்.
இந்தக் காலகட்டத்தில் குரு பகவான் உங்களின் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் ராசியைப் பார்வை செய்கிறார். இதனால் உங்கள் காரியங்கள் அனைத்தும் அலைச்சல் இல்லாமல் சுலபமாக முடிவடையும். ஆகார விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். வயிறு உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.
எட்டாம் ராசியைப் பார்வை செய்யும் குரு பகவானின் அருளால் மாற்று இனம், மதத்தைச் சேர்ந்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். புதியவர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். சுதந்திரமாகச் சிந்தித்துச் செயல்படுவீர்கள். அரசாங்கத்திலிருந்தும் எதிர்பார்த்த சலுகைகள் தேடி வரும்.
தொழில் ராசியான பத்தாம் இடத்தைப் பார்வை செய்யும் குரு பகவானின் கருணையினால் உங்களின் புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். காரியங்களை அனுகூலமாக முடித்துக்கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். பெரியோரின் துணையோடு உங்களின் செயல்களை திறமையாக முடித்து விடுவீர்கள். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள். கடிதப் போக்குவரத்தால் நன்மைகள் உண்டாகும். பொதுநிகழ்ச்சிகளில் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு
அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கடினமான வேலைகளை சரியாகத் திட்டமிட்டு முடித்துவிடுவீர்கள். மேலதிகாரிகள் உங்களிடம் நட்புடன் நடந்துகொள்வார்கள். உங்களுக்கு சிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். பண வரவிற்கு எந்தக் குறைவும் இருக்காது.
வியாபாரிகள்
இந்த ஆண்டு கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யவும். எதையும் சிந்தித்து செயல்படுத்தினால் எதிர்பார்த்த லாபத்தைப் பெறலாம். கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும்.
விவசாயிகள்
விளைச்சல் பெருகும். லாபம் அதிகரிக்கும். விளை பொருட்களை புதிய சந்தைகளில் விற்பனை செய்வீர்கள். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். புதிய குத்தகைகளை எடுக்கலாம்.
அரசியல்வாதிகள்
பொதுச் சேவையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். தொண்டர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியடைவீர்கள்.
கலைத்துறையினர்
புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அவற்றில் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். திறமைகள் வெளிப்படும். சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். உங்களின் சமயோஜித புத்தியால் தக்க நேரத்தில் சரியான முடிவை எடுப்பீர்கள்.
பெண்மணிகள்
தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். உடல் நலம் சுமாராக இருப்பதால் சில மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். சகோதர சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
மாணவமணிகள்
நல்ல மதிப்பெண்களை வாங்குவீர்கள். விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள். இந்தக் காலகட்டம் முழுவதும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு தொடரும். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.
கார்த்திகை - 2, 3, 4
செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.
ரோகிணி
வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும்.
மிருகசீரிஷம் - 1, 2
வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும்.
பரிகாரம்
புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயங்களுக்குச் செல்லுங்கள், முடிந்தவர்கள் திவ்ய தேசங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும்.