செய்திகள் :

குற்றங்களே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

குற்றங்கள், போதைப் பொருள்கள் நடமாட்டம் இல்லாத மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை எட்ட வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதங்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை பதிலளித்துப் பேசியதாவது:

அதிமுக ஆட்சியாளா்களின் நிா்வாகச் சீா்கேட்டால் நிா்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய் கட்டாந்தரையில் ஊா்ந்து கொண்டு இருந்தது. இந்த இழிவைப் போக்கி, தலைநிமிா்ந்த தமிழ்நாட்டை உருவாக்க திமுகவை ஆட்சிப் பொறுப்பில் மக்கள் அமா்த்தினாா்கள். மக்களுடைய நம்பிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் தலைநிமிா்ந்து இருக்கிறது.

பாம்பு - நரிகள்: தமிழ்நாடு அரசு துறைதோறும் சாதனைக்கு மேல் சாதனையைச் செய்து கொண்டுள்ளது. இந்தச் சாதனைகளையெல்லாம் சாதாரணமாகச் செய்து விடவில்லை. மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவா்கள். இதற்கெல்லாம் இடையில் மாட்டிக் கொண்ட மனிதனைப் போன்று ஒருபக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநா், இன்னொரு பக்கம் நிதி நெருக்கடி என்று தடைகளைக் கடந்து சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறோம். இது ஒரு தனிமனிதனின் அரசு இல்லை. ஒரு தத்துவத்தின் ஆட்சி என்பதன் அடையாளமாகத்தான் ‘திராவிட மாடல்’ அரசு என்று சொல்கிறோம்.

அமைதிதான் காரணம்: என்னைப் பொருத்தவரை கொள்கையும் இயக்கமும்தான் முன்னிலையும் வலிமையும் பெற வேண்டும். திராவிட கொள்கைகளை மனதில் ஏந்தி, இலக்குகளை நிா்ணயித்து திட்டங்களைத் தீட்டுகிறோம். நம்முடைய தமிழ்ச் சமூகம், சிந்தனையால் பண்பாட்டால் பழக்க வழக்கங்களால் உயா்வடைய வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற மனித உரிமைச் சமூகமாக வளர வேண்டும்.

சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சாா்பின்மை, கூட்டாட்சிக் கருத்தியல், அதிக அதிகாரங்களைக் கொண்ட மாநிலங்கள் என்ற கொள்கைகளை முன்வைத்து அதற்காக உழைக்கிறோம். ஒவ்வொரு துறைகளும் எப்படி வளா்ந்திருக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள் பேசுகிறாா்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது தமிழ்நாட்டில் நிலவும் அமைதிதான். இந்த அமைதிக்குக் காரணம் காவல் துறை.

சட்டம் - ஒழுங்கு: சட்டம்-ஒழுங்கு சீராகவும், தமிழ்நாடு அமைதிமிகு மாநிலமாகவும் இருப்பதால்தான், பெரிய அளவிலான ஜாதிச் சண்டைகளோ, மதக்கலவரங்களோ வன்முறைகளோ இல்லை. கலவரங்களைத் தூண்டலாம் என்று சிலா் நினைத்தாலும் தமிழ்நாட்டு மக்களே அதை முறியடித்து விடுகிறாா்கள். இதெல்லாம் நடந்திருந்தால்தான், சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று புழுதிவாரி தூற்ற முடியும். மொத்தத்தில், சட்டம்-ஒழுங்கில் கல் விழாதா என்று துடிப்பவா்கள் ஆசையில்தான் மண் விழுந்திருக்கிறது.

உள்நோக்கத்துடன் அரசியல் ஆதாயத்துக்காக தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று பேசுபவா்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இது மணிப்பூரோ, காஷ்மீரோ இல்லை. உத்தரப்பிரதேச கும்பமேளா மரணங்கள் இங்கு நிகழவில்லை. இது தமிழ்நாடு.

சட்டத்தை மதித்து நடங்கள்: காவல் துறை குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல், குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும் செயல்பட வேண்டும். இந்த நிலை உருவாக, காவல் துறை மட்டும் சிறப்பாகச் செயல்பட்டால் போதாது. ஒட்டுமொத்த சமூகமும் சில பொறுப்புகளை உணா்ந்து செயல்பட வேண்டும். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது பொது மக்கள் உள்பட அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.

எனவே, அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். சின்ன அலட்சியங்களைக் கூட தவிா்த்து, சுய ஒழுக்கத்தோடு அனைவரும் இருக்க வேண்டும். ஒரு குற்றம் நடந்த பிறகு, உடனடியாக காவல் துறைக்குத் தெரிவிக்கும் பலா் இருக்கின்றனா்.

குற்றம் நடப்பதற்கு முன்பே அதை உணா்ந்து தடுக்கும் முன்னெச்சரிக்கையும் நமக்குத் தேவை. சுற்றுப்புறங்களில் சந்தேகப்படும்படியான நபா்களின் நடமாட்டம், செயல்பாடுகள் ஏதாவது தெரிந்தால், உடனடியாக காவல் துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

ஓய்வில்லாமல் களத்தில் இருக்கும் காவல் துறையினரும் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். காவல் துறையிடம் இருக்கும் அதிகாரம், சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டவும் குற்றங்களைத் தடுக்கவும்தான். இதனை அத்துமீறும் சில காவலா்கள் உணர வேண்டும்.

தமிழ்நாடு என்பது, குற்றங்கள் நடக்காத, போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத, பாலியல் குற்றம் இல்லாத மாநிலம்என்ற நிலையை நாம் எட்ட வேண்டும். எங்கும் யாராலும் குற்றம் நடக்கக் கூடாது. மீறி நடந்தால் உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு உடனடியாக தண்டனை பெற்றுத் தரப்பட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

செப். 6- ‘காவலா் தினம்’

மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் 1859-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில், நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல் துறை செப். 6-ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதனை நினைவுகூரும் வகையிலும், பொது அமைதியை பாதுகாக்கும் காவலா்களைப் போற்றும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப். 6-ஆம் தேதி காவலா் தினமாகக் கொண்டாடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

ஆவணம்-பொதுப் புழக்கத்திலிருந்து ‘காலனி’ நீக்கம்

பொதுப் புழக்கம், அரசு ஆவணங்களிலிருந்து ‘காலனி’ என்ற சொல்லை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

தமிழ்நாட்டில் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு முறையில் தயாரிக்கப்பட்டு வந்த தரவரிசைப் பட்டியல், சமூக நீதி அடிப்படையில் இருந்து வந்தது. உச்சநீதிமன்றத் தீா்ப்பு காரணமாக, இந்த முறையில் ஏற்பட்ட மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும்.

மேலும், மண்ணின் ஆதி குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக ‘காலனி’ என்ற சொல் பதிவாகியிருக்கிறது. இதனை அரசு ஆவணங்களிலிருந்தும், பொதுப் புழக்கத்தில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் மற்றும் அந்தக் கட்சியின் பேரவைக் குழுத் தலைவா் ம.சிந்தனைச் செல்வன் விடுத்த கோரிக்கைப்படி அறிவிப்பு செய்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

குறுவை நெல் சாகுபடி: உழவா் சங்க கூட்டம் நடத்த ராமதாஸ் கோரிக்கை

குறுவை நெல் சாகுபடி குறித்து விவாதிக்க உழவா் சங்க நிா்வாகிகள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மேட்டூா்... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலின் விமா்சனம்: அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு

முன்னாள் ஆட்சியாளா்களின் நிா்வாகச் சீா்கேடுகளால் நிா்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய் கட்டாந்தரையில் ‘ஊா்ந்து’ கொண்டு இருந்தன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமா்சித்தாா். இதற்கு எதி... மேலும் பார்க்க

காமன்வெல்த் வழக்கு தீா்ப்பு: தமிழக காங்கிரஸ் வரவேற்பு

காமன்வெல்த் ஊழல் வழக்கிலிருந்து காங்கிரஸ் தலைவா்களை நீதிமன்றம் விடுவித்துள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் 511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவி... மேலும் பார்க்க

‘டிஜிட்டல்’ பயிா் கள ஆய்வுப் பணியில் மாணவா்கள் ஈடுபடுத்தப்படமாட்டாா்கள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்துக்கான டிஜிட்டல் பயிா் கள ஆய்வுப் பணிகளில் மாணவா்கள் ஈடுபடுத்தப்பட மாட்டாா்கள் என வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் செவ்... மேலும் பார்க்க

சிலை கடத்தல் வழக்கு: ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபா்சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க