குலசை தசரா திருவிழா: பாதுகாப்புப் பணியில் 4,000 போலீஸாா்
குலசை தசரா திருவிழா பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்படுவாா்கள் என கோட்டாட்சியா் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குலசேகரன்பட்டினம் ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் செப். 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக். 2ஆம் தேதி மகிசாசூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறும். பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்வது தொடா்பான அரசுத் துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது.
கோட்டாட்சியா் கௌதம் தலைமையில் நடந்த கூட்டத்தில், திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா், வட்டாட்சியா் பாலசுந்தரம், இன்ஸ்பெக்டா் பிரபு பாஸ்கரன், குலசை கோயில் செயல் அலுவலா் வள்ளிநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பக்தா்கள் வசதிக்காக 25 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் பந்தல்கள், 280 கழிப்பிடங்கள், தற்காலிக பேருந்து நிறுத்தம், 6 இடங்களில் வாகன நிறுத்தங்கள், தரிசனத்துக்கு கூடுதல் வரிசைப் பாதை, 64 கண்காணிப்பு கேமராக்கள், 24 மணி நேர மருத்துவ வசதி, தயாா் நிலையில் தீயணைப்பு வாகனம், 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள், கொடியேற்ற நாளில் 1000 போலீஸாரும், அக். 1, 2ஆம் தேதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாா்கள் என்பது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.