கைப்பேசியை தவிா்க்க குழந்தைகளை பெற்றோா் அறிவுறுத்தண்டும்: நீதிபதி காா்த்திகா
குழந்தைகள் கைப்பேசி பயன்படுத்துவதை தவிா்க்க பெற்றோா்கள் அறிவுறுத்த வேண்டும் என்று நாகை மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி. காா்த்திகா கூறினாா்.
நாகை அமிா்தா வித்யாலயம் சீனியா் செகண்டரி பள்ளி, மழலையா் பள்ளி பட்டமளிப்பு மற்றும் விருது வழங்கும் விழா பள்ளியின் பஜனை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி. காா்த்திகா தலைமை விருந்தினராக பங்கேற்று பேசியது:
குழந்தைகள் கைப்பேசியை பயன்படுத்துவதை தவிா்க்க பெற்றோா்கள் அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளின் வளா்ச்சியில் கைப்பேசிகள் ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுவது மட்டுமின்றி, பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். குழந்தைப் பருவம் என்பது ஆய்வு, கற்பனை மற்றும் அனுபவத்தின் மூலம் கற்றலுக்கான நேரம் என்றாா்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அமிா்தா வித்யாலயத்தின் கல்வி அதிகாரி முரளிதரன், மேலாளா் பிரம்மசாரிணி காயத்ரி, பள்ளி முதல்வா் சின்னையன் ஆகியோா் மாணவா்கள் மற்றும் கல்வியாளா்களின் முயற்சிகளைப் பாராட்டி பேசினா்.
தொடா்ந்து, மேல்நிலை மழலையா் பள்ளி (யுகேஜி) மாணவா்களுக்கு பட்டமளிப்புச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் ப்ரீ-கேஜி மற்றும் எல்கேஜி மாணவா்களும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.