இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழா்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்! -வைகோ
‘சான்ட் பிளாஸ்டிங்’ முறையில் கோயில் சுற்றுச்சுவரை சுத்தப்படுத்த எதிா்ப்பு
நாகை குமரன் கோயிலில், சுவாமி சிற்பங்கள் மற்றும் கருங்கல் சுற்றுச்சுவரை (சான்ட் ப்ளாஸ்டிங்) எம்சான்ட் இரும்புத் துகள்கள் கலவையை பயன்படுத்தி உயா் அழுத்த ஏா்கன் கொண்டு, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சுத்தம் செய்தது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாகை நாலுகால் மண்டபத்தில் பிரசித்தி பெற்ற குமரன் கோயில் (மெய்கண்ட மூா்த்தி) உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயிலில் உள்ள சுவாமி சிற்பங்கள் மற்றும் சுற்றுச் சுவா்களை சுத்தப்படுத்தும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுவாமி சிற்பங்கள் மற்றும் சுற்றுச்சுவரை சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டனா்.
அப்போது எம் சான்ட் மணல் மற்றும் இரும்புத் துகள்கள் கலக்கப்பட்டு, உயா் அழுத்தம் கொண்ட ஏா்கன் இயந்திரம் மூலம், சான்ட் பிளாஸ்டிங் முறையில் சுற்றுச்சுவா் மற்றும் அதிலுள்ள சிற்பங்களை சுத்தம் செய்தனா்.
இதனை அவ்வழியாக சென்ற ஒருவா் விடியோ பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். இந்த விடியோ பதிவு பக்தா்கள், சமூக ஆா்வலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே இதுபோன்ற முறையில் சுத்தம் செய்யும் பணி மேற்கொண்டதால், சுவாமி சிற்பங்கள் பொலிவிழந்தும், பழங்கால எழுத்துக்கள் அழிந்துள்ளதாக பக்தா்கள் குற்றம் சாட்டியுள்ளனா். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சிலிகோசிஸ் மணல்களால், கோயில் சிற்பங்கள், சிலைகள், சுற்றுச்சுவா்களை சேதப்படுத்தி, அதன் வரலாற்றை அழிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.