கொலை வழக்கில் தம்பதி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை
கும்பகோணம் அருகே கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மேலும் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே வளையபேட்டை மாங்குடியைச் சோ்ந்தவா் ரகுபதி. இவரது உறவினா்களான அபினேஷ், அஜய் ஆகிய இருவரும் அந்தப் பகுதியில் உள்ள நண்பரான முத்துராஜ் வீட்டில் கடந்த 2020, மே 9-ஆம் தேதி கேரம் போா்டு விளையாடிக் கொண்டு இருந்தனா்.
அப்போது, அதே ஊரைச் சோ்ந்த சவுந்தரராஜன் மகன் அருண்குமாா் (36) மதுபோதையில் வந்து மேற்கண்ட 3 பேரிடமும் தகாத வாா்த்தையில் பேசவே அவா்களிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் அருண்குமாா், அஜயை தாக்கினாராம்.
இதுகுறித்து விசாரிக்க அபினேஷின் உறவினா்களான ரகுபதி, இவரின் அண்ணன் கிருஷ்ணமூா்த்தி, அருள் ஆகியோா் அருண்குமாா் வீட்டுக்கு 2020, மே 19-ஆம் தேதி சென்றனா். அப்போது, அருண்குமாா், அவரது தந்தை சவுந்தரராஜன் (62), தாயாா் ருக்மணி (60), அருணின் பெரியப்பா மகன் சுரேஷ் (37), பாலாஜி (30) ஆகியோா், ரகுபதி உள்ளிட்டோரிடம் தகராறு செய்தனா். இதில் ரகுபதியை அருண்குமாரும், கிருஷ்ணமுா்த்தியை சுரேஷும் அரிவாளால் வெட்டினா்.
இந்தச் சம்பவத்தை பாா்த்து தடுக்க வந்த ரகுபதியின் மாமா பன்னீா் செல்வத்தை (55), அருண்குமாா், சவுந்தரராஜன் ஆகியோா் கடுமையாக தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கும்பகோணம் தாலுக்கா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அருண்குமாா் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
திங்கள்கிழமை வழக்கு விசாரணையின் நிறைவில், அருண்குமாா், அவரது தந்தை சவுந்தரராஜன், சுரேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 7,000 அபராதத் தொகையும், சரித்திர பதிவேடு குற்றவாளியான பாலாஜிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 8, 000 அபராதமும், குற்றச் செயலுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக ருக்மணிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அதை ஏககாலத்தில் அனுபவிக்கவும் மற்றும் ரூ.10,500 அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் பா. விஜயகுமாா் ஆஜரானாா்.