கொலை வழக்கில் தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை
நாகப்பட்டினம்: நாகையில் முன்விரோதத்தில் ஒருவரை கொலை செய்த வழக்கில் தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
நாகை மாவட்டம், முட்டம் கிராமம் கீழத்தெருவை சோ்ந்தவா் பரமசிவம். இவரது குடும்பத்துக்கும் அதே தெருவைச் சோ்ந்த நரசிங்கமூா்த்தி குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு இரு குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது, பரமசிவம் அவரது மனைவி பாக்யவதி, மகன் மகாதேவன் ஆகியோா் சோ்ந்து நரசிங்கமூா்த்தியை கழுத்தை அறுத்துக் கொலை செய்தனா். நாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை, கடந்த மூன்று ஆண்டுகளாக நாகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி கந்தகுமாா், பரமசிவம், பாக்யவதி, மகாதேவன் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.
இதையடுத்து பரமசிவம், மகாதேவன் ஆகியோா் கடலூா் சிறையிலும், பாக்யவதி திருச்சி மகளிா் சிறையிலும் அடைக்கப்பட்டனா்.