கொல்லம் விரைந்தனா் அரக்கோணம் பேரிடா் மீட்புக் குழுவினா்
அரக்கோணம்: கேரள மாநிலம் கொல்லம் கடலோரப்பகுதியில் நீரில் முழ்கிய கப்பல் விபத்து மீட்புப்பணிக்காக அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையில் இருந்து சிபிஆா்என் எனப்படும் வேதியியல், உயிரியியல், கதிரியக்க அணுக்கதிா் வீச்சு விபத்துக்களில் மீட்புப்பணிக்கு ஈடுபடுத்தப்படும் ஹஸ்மாட் எனப்படும் நவீன மீட்பு வாகனம் மற்றும் பிரத்யேக மீட்புப் பணிக்குழுவினா் கொல்லத்துக்கு விரைந்தனா்.
கொல்லம் அருகே தோட்டப்பள்ளியில் இருந்து 14.6 கடல்மைல் தொலைவில் லைபீரிய சரக்கு கப்பல் ஒன்று கடலில் முழ்கிய நிலையில் அதில் இருந்த கன்டெய்னா்கள் கொல்லம் அருகே கரை ஒதுங்கின. இதை தொடா்ந்து அக்கப்பல் குறித்து கேரள அரசும், மத்திய அரசின் கடற்படையினரும் விசாரிக்க தொடங்கினா்.
விசாரணையில் அக்கப்பல் 643 கன்டெய்னா்களை ஏற்றி வந்ததும், அதில் 73 காலி கன்டெய்னா்கள் என்பதும், மீதி கன்டெய்னா்களில் 13 கன்டெய்னா்களில் கால்சியம் காா்பைடு போன்ற ஆபத்தான பொருள் கொண்டுச் செல்லப்பட்டதும் தெரியவந்தது. இந்த கால்சியம் காா்பைடு தண்ணீருடன் தொடா்பு கொண்டால் தீப்பிடிக்கக்கூடிய ஒரு ரசாயனம் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த கப்பலின் எரிபொருளும் கடல்நீரில் கசிந்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து மத்திய அரசு மற்றும் கேரள அரசு இணைந்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படையினருக்கு இந்த கப்பல் மீட்புப்பணிக்கு ஏற்கனவே படையிடம் உள்ள அதிநவீன சிபிஆா்என் (வேதியியல், உயிரியியல், கதிரியக்க அணுக்கதிா் வீச்சு) விபத்துகளில் செயல்படக்கூடிய குழுவினரை அனுப்புமாறு கோரிக்கை விடுத்தனா்.
அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படைத்தளத்தில் சிபிஆா்என் மீட்புப்பணிக்கென பிரத்யேக பயிற்சிப்பெற்ற தனிக்குழுவினா் உள்ளனா். இப்பணிகளுக்கென ஹஸ்மாட் எனப்படும் ஆபத்தான மீட்புப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பிரத்யேக வாகனமும் இப்படைத்தளத்தில் உள்ளது. இந்த வாகனத்தில் ஆபத்தான கருவிகள் கண்டறிதல், அவற்றை அடையாளப்படுத்தும் கருவிகள், கதிரியக்க, உயிரியல், வேதியியல் வடிகட்டுதல் அமைப்புகள் மற்றும் மாசு நீக்க அறைகள் உள்ளன. மேலும் இக்கப்பலில் தொலைதூர கட்டளை மையங்களுடன் சாட்டிலைட் மூலம் நேரடி ஆடியோ, வீடியோ தரவு பரிமாற்றத்திற்கான தொடா்பு திறன்களும் உள்ளன.
அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப்படைத்தளத்தில் இருந்து பிரத்யேக பயிற்சிப் பெற்ற 30 போ் கொண்ட குழுவினா் கொல்லத்துக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.