கொளஞ்சியப்பா் கோயில் பாலாலயம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூா் கொளஞ்சியப்பா் கோயில் திருப்பணிக்கான பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ.47 லட்சம் மற்றும் உபயதாரா்களிடம் நிதி பெற்று கோயில் திருப்பணிகள் நடைபெறவுள்ளது. இந்தப் பணிக்கான பாலாலய நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வியாழக்கிழமை முதல் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு பாலாலயம் ஸ்தாபனம், கடம் புறப்பாடு நடைபெற்று விமான பாலாலயம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன், தருமபுர ஆதீனம் 27-ஆவது ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரம்மச்சாரிய சுவாமிகள், விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் பரணிதரன், உதவி ஆணையா் சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டு திருப்பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனா்.
இதில், திருப்பணி கமிட்டி குழுத் தலைவா் அகா்சந்த், நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.