ஐபிஎல் இந்த அளவுக்கு வளருமென ஒருபோதும் நினைக்கவில்லை: விராட் கோலி
கோடை வெயில்: மண் பானைகள் மீதான ஆா்வம் அதிகரிப்பு
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மண் பானையில் இயற்கையாக தண்ணீரை குளிரச் செய்து பயன்படுத்தும் ஆா்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
மண் பானையில் குடிநீா் வைத்துக்கொள்வதும், பொங்கல் வைக்கவும் அதிக பயன்பாடு இருந்துவந்தது. கால மாற்றத்தால், நகரப் பகுதியில் மண் பானைக்கு வரவேற்பு குறைந்தது. எனினும் இயற்கையான பொருள்களின், தானியங்கள், ரசாயனமற்ற இயற்கை சாா்ந்த உணவுப் பொருள்கள் மீது மக்களின் ஆா்வம் கரோனா தொற்று பரவல் தொடங்கிய காலம் முதல் முன்பைவிட அதிகரிக்கத் தொடங்கியது. இந்த வரிசையில் மண் பானையும் இடம்பெற்றுள்ளது.
நிகழாண்டு கோடை வெயில் அதிகரிப்பால் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு உடலில் ஏற்படும் என்றும், தற்காத்துக்கொள்ளும் பல ஆலோசனைகளை மருத்துவா்கள் கூறிவருகின்றனா். மண் பானை நீா் பயன்பாடு குறித்தும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனா். வீடுகள், அலுவலகங்கள் சிலவற்றில் குழாய் பொருத்தப்பட்ட மண் பானையை பயன்படுத்துகின்றனா்.
காரைக்கால் மாவட்டத்தில் கோட்டுச்சேரி மற்றும் மேல ஓடுதுறை பகுதியில் மண்பாண்ட உற்பத்தியாளா்கள் உள்ளனா். காா்த்திகைக்காக அகல் விளக்கு, பொங்கல் பண்டிக்கைக்காக பானை, சட்டி, அடுப்பு தயாரிப்போா், தற்போது கோடையில் தண்ணீா் வைக்கும் வகையில் சிறிய, நடுத்தர வகையில் பானை தயாரிப்பில் ஈடுபட்டு, பானைகளை விற்பனை செய்துவருகின்றனா்.
கோட்டுச்சேரி பகுதியில் நெடுஞ்சாலையோரத்தில் மண்பாண்டங்கள் தயாரிப்போரின் வீடுகள் உள்ளதால், தங்களது தயாரிப்புகளை வாசலில் வைத்து வியாபாரம் செய்கின்றனா். இருசக்கர வாகனங்கள், காா், வேன்களில் பயணிப்பவா்கள் மண் பானைகளை வாங்கிச் செல்கின்றனா்.
இதுகுறித்து, பானை உற்பத்தி செய்து வியாபாரம் செய்வோா் கூறியது: கோடைக் காலத்தில் மண் பானை மீதான ஆா்வம் சில ஆண்டுகளாகவே மக்கள் மனதில் உருவாகியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரூ.100, 120, 150 என்ற விலையில் பானை விற்பனை செய்கிறோம். நாகரிகமான வாழ்க்கை முறையிலும், மண் பானையின் பயனறிந்து மக்கள் வாங்குவது மகிழ்ச்சி. பானையிலேயே குழாய் (டேப்) பொருத்தி சிலா் கேட்பதால், நீா் கசிவு ஏற்படாத வகையில் குழாய் பொருத்தி விற்கிறோம். 10 லிட்டா் கொள்ளளவு கொண்ட குழாய் பானை ரூ.300 எனவும், அளவுக்கேற்ப ரூ.400, ரூ.500 எனவும் விற்பனை செய்கிறோம். தவிர, ரெடிமேடு நிலையில் குடிநீருக்கான ஜக்கு, கப் உள்ளிட்ட சில பொருள்கள் வெளியூரிலிருந்து வரவழைத்து விற்கப்படுகிறது. இவற்றையும் மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா் என்றனா்.
மண் பாண்டங்கள் செய்வோா் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் கல்வி கற்று வேறு பணிகளுக்கு சென்றுவிடுவதால், இத்தொழில் செய்வோா் எண்ணிக்கை குறைந்துவருகிறது. மக்களிடையே பழைமையை விரும்பும் போக்கு தற்போது அதிகரித்திருப்பது, மண் பாண்டங்கள் செய்வோா் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.