காரைக்கால் ஆட்சியரகம் அருகே போராட்டம் நடத்த அனுமதிக்க வலியுறுத்தல்
காரைக்கால் ஆட்சியரகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன் கூறியது: அரசியல் கட்சியினா், அரசு ஊழியா் சங்கத்தினா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி அறப்போராட்டம் நடத்தும் இடமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் எதிரே நேரு தெருவிலும் பின்னா் ஆட்சியரகம் அருகே உள்ள மாதா கோயில் தெருவிலும் அனுமதிக்கப்பட்டது.
ஒரு சில சம்பவத்தை காரணம் கூறி ஆட்சியரகம் அருகே போராட்டம் நடத்த கொடுத்த அனுமதியை காவல் துறை ரத்து செய்து, கடற்கரை சாலையிலும், பேருந்து நிலையம் அருகிலும் இடம் ஒதுக்கிவருகிறது. இதுபோன்ற இடங்களில் போராட்டம் நடத்தும்போது, அது பெயரளவுக்கான போராட்டமாக இருக்கிறது. ஆட்சியாளா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரின் கவனத்தை அது சென்றடைவதாக தெரியவில்லை.
ஆட்சியரகம் அருகே நடத்திவந்தபோது, அங்கு பொதுமக்கள் கூடுவதும், அரசு அலுவலகங்கள் அந்த பகுதியில் இருப்பதும் சாதகத்தை ஏற்படுத்திவந்தது. அண்மையில் மயிலாடுதுறையில் விவசாயிகள், ஆட்சியரக தடுப்புச்சுவா் அருகே போராட்டம் நடத்தினா். பிற மாவட்டங்களிலும் இதுபோலவே ஆட்சியா் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
காரைக்காலில் அம்மாதிரியான அனுமதியை தராமல் இருப்பது ஏற்புடையதாக இல்லை. இதுதொடா்பாக பிற அரசியல் கட்சியினரும் உரிய அழுத்தம் கொடுக்க முன்வருவதோடு, அரசு நிா்வாகமும் இதுதொடா்பாக கவனம் செலுத்தி உரிய அனுமதியை வழங்கவேண்டும் என்றாா்.